செவ்வாய், 27 ஏப்ரல், 2010

நாம் சுயநலவாதிகள்

விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டே இருக்கிறது என்று புலம்புகிறோம்.
அரசாங்கத்தை திட்டுகிறோம். ஆனால் அதை நேரடியாக அரசுக்கு உணர்த்த கிடைக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டுவிடுகிறோம் அல்லது அலட்சியப்படுத்திவிடுகிறோம். இன்று நடைபெரும் விலைவாசிக்கெதிரான பாரத் பந்த்தைத்தான் சொல்கிறேன். எந்தக்கட்சிக்கும் ஆதரவாக இதை நான் சொல்லவில்லை. குடிமக்களாகிய நமக்கு அரசியல் சட்டமே அனுமதித்திருக்கும் ஒரு வாய்ப்பு இது. எதிர்கட்சிகள் வேண்டுமானால் இதை ஆளுங்கட்சிக்கு எதிரானதாக பயன்படுத்தலாம். ஆனால் குடிமக்களாகிய நமக்கு அரசுக்கு நமது மனநிலையை மௌனமாக வெளிப்படுத்த கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. இப்போதெல்லம் எதிர்க்கட்சிகள் நடத்தும் பந்த் என்பது பொதுவாக பிசுபிசுத்துத்தான் போகிறது. காரணம் அரசு தன் முழு பலத்தைப்பயன்படுத்தி பந்த்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன. ஆனால் மக்களாகிய நாம் ஒரு முடிவெடுத்து வேலைக்குப் போகாமல் இருந்தோ அல்லது கடைகளை அடைத்தோ நம் எதிர்ப்பைக் காட்டினால் கண்டிப்பாக அரசால் அதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் நாம் சுயநலவாதிகள். “பூனைக்கு யார் மணி கட்டுவது” என்று நாம் முதலில் அதைச்செய்ய தயங்குகிறோம். அல்லது நான் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அல்லது கடயை அடைத்தால் “அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியம்” என்பதுபோல் நாம் மட்டுமே பைத்தியக்காரர்களாகிவிடுவோம் என்று எண்ணி வாழா இருந்து விடுகிறோம். கடைசியில் நம் உணர்வுகளை வெளிக்காட்டாமலேயே இருந்து விடுகிறோம். நமது உரிமைகளையும் வாய்ப்புகளையும் வீணடித்துவிட்டு வெட்டியாய் புலம்பிக்கொண்டுள்ளோம்..

அது சரி நீ என்ன செய்தாய் என்று கேட்கிறீர்களா?

வேலைக்குச் சென்றேன். பிடுங்க ஆணி இல்லை, அதனால் இப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

நான்(ம்) சுயநலவாதி(கள்)